கோவை: கோவை அருகே குடல் அலர்ஜி காரணமாக ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வனச்சரகம் நாத்துக்காடு அருகாமையில் ஆண் யானை ஒன்று காப்பு காட்டுக்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை அந்த யானை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் உதவி வன பாதுகாவலர், கோவை வன சரக பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வனசரக அலுவலர் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை அலுவலர், வன கால்நடை மருத்துவர்கள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மடத்தூர் கால்நடை மருத்துவர் குழுவினரால் அந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
பிரேத பரிசோதனையில் உயிரிழந்த ஆண் யானைக்கு 20 முதல் 25 வயது இருக்கலாம் எனவும் குடல் அலர்ஜி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது மேலும் உயிரிழந்த யானையின் உறுப்பு மாதிரிகள் மருத்துவ குழு மூலம் பரிசோதனைகளுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் வனவிலங்கு அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


