கோவை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்ட விரோத ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது ஒவ்வொரு பிரச்சனையிலும் நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அரசு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறும் நிலை ஏற்பட்டிருப்பதே, தற்போதைய அரசு அராஜகமான மற்றும் மோசமான ஆட்சியாக செயல்பட்டு வருவதை காட்டுகிறது என்று கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருந்த புத்தக கண்காட்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதனை தரக்குறைவாக விமர்சிக்கும் புத்தகத்தை வெளியிடுவதாக, குறிப்பிட்ட கடை எண் உட்பட சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.
முதல்வர் திறந்து வைக்கும் புத்தகக் கண்காட்சியிலேயே ஒரு நீதிபதியை அவதூறாக பேசும் கடை இடம்பெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும், மூன்று நாட்களாக முதலமைச்சர் அல்லது அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை உயர் நீதிமன்றம் அந்த புத்தகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாகவும், இது தமிழகத்தில் நிலவும் வெட்கக்கேடான சூழ்நிலையை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திராவிட மாடல் ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் கேடுகெட்ட ஆட்சியின் உதாரணம் என்றார்.மாநிலத்தின் சட்ட அமைச்சர் ரகுபதி கடவுளையும் தெய்வங்களையும் ஒப்பிட்டு பேசும் வகையில் கருத்து தெரிவித்தது மிக மோசமானது என்றும் மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய வேண்டும் என அப்போது திமுக தரப்பே வலியுறுத்தியதை நினைவூட்டி, தற்போது அதே திமுக நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிப்பது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறினார்.
நீதிமன்ற உத்தரவை சட்டவிரோதமாக விமர்சிப்பது மிகப்பெரிய குற்றம் என்றும், அதற்கான பொறுப்பை மாநில அரசு ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சட்ட அமைச்சர் ரகுபதி இன்னும் பதவியில் நீடிப்பதே மாநிலத்திற்கு வெட்கக்கேடானது என்றும், அவரை கைது செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஒரு கோவிலில் மட்டும் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளை நடந்துள்ளதாகவும், பல்வேறு கோவில்களில் எத்தனை கோடி ரூபாய் அளவில் கொள்ளை நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.
கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை மேற்கோள் காட்டிய அவர், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கொள்ளை கூடாரமாக செயல்பட்டு வருவதாகவும், தினந்தோறும் கோவில்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் இரண்டு ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் தேர்தல் வரும் இந்த வருடம் கொடுக்கிறார்கள் என்றும் இதன் மூலம் மக்கள் ஏமாறுவார்கள் என்று திமுக நினைப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர் திமுக ஆட்சி செய்யக்கூடாது என்று மக்கள் நினைப்பதாகவும் நிச்சயமாக பாஜக அதிமுக ஆட்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார் நல்ல ஆட்சியை தருவார் என தெரிவித்தார்.

