கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக
முனைவர் சுப்பிரமணியன் காசிராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) புதிய பதிவாளராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் மூத்த வேளாண் விஞ்ஞானியும், கல்வியாளருமான முனைவர் சுப்பிரமணியன் காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களையும், 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் ஆவார். மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சித் திட்டத்தின் (ICAR) இளநிலை ஆராய்ச்சியாளருக்கான உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.
இந்திய சீனா ஒப்பந்த திட்டத்தின் உதவியுடன் சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் (Zhejiang University) மட்கும் பிளாஸ்டிக் மூடாக்கு குறித்து மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
பின்னர், அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற ‘ஃபுல்பிரைட்’ (Fulbright Fellow) ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நுண் தட்பவெப்பநிலை மாற்றங்கள் குறித்து உயர் ஆராய்ச்சிகளை செய்துள்ளார். இவ்வாறு சர்வதேச அளவில் சிறந்த ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்.
இவர் 150-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் 5 புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது தலைமையின் கீழ் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் 2010-ஆம் ஆண்டு நாட்டின் “சிறந்த கே.வி.கே” (Best KVK) விருதினைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு, நிலக்கடலை ஆராய்ச்சியில் சாதனை செய்ததற்காக திரு. நல்ல வெங்கடப்பா விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேலும் இந்திய உழவியல் சங்கத்தால் வழங்கப்படும் சிறந்த விஞ்ஞானி விருது மற்றும் தங்கப்பதக்கத்துடன் கூடிய ஐ.எஸ்.ஏ (ISA) ஃபெலோ விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

