கோவை: மருத்துவ துணை படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்பதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட தமிழ் புலிகள் கட்சி, தமிழ்நாடு சுயமரியாதை கழகம், உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வு கட்டாயம் என்பதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்களை கண்டன எழுப்பினர்.
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு தேவை இல்லை என்று கூறிவரும் நிலையில் துணை பிரிவுகளுக்கும் நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், எந்த தேர்வு வந்தாலும் மாணவர்கள் சந்திப்பார்கள் ஆனால் அந்த மாணவர்களை தடுத்து நிறுத்த தான் இது போன்ற தேர்வுகள் வைக்கப்படுவதாக தெரிவித்தார். நீட் தேர்வை வணிகமாக்கி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வால் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுவதாகவும் ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி மையம் என்று கோடி கோடியாக பணத்தை வசூலித்து வருவதாகவும் தெரிவித்த அவர் பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பு என்று சூழல் ஏற்படும் என்று சாதாரண கூலி வேலை செய்பவர்கள் மருத்துவ படிப்பு என்பது கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திராவிடர் கழகத் துணை பொதுச் செயலாளர் மதிவதனி, மருத்துவ படிப்பில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பொழுது போராடிய போராட்டம் தற்பொழுது அதன் துணை தேர்வுகளுக்கும் போராடும் நிலை வந்துள்ளது என தெரிவித்தார். இந்தியாவிலேயே பாசிச ஆதிக்கத்திற்கு அடிப்பணிய மாட்டோம் என்று கூறக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் எனவும் தெரிவித்தார். நீட் தேர்வில் நெகட்டிவ் மார்க் இருப்பதால் ஒரு பய உணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு மூலம் தகுதியான மாணவர்களை மருத்துவர்கள் ஆக ஆக்குவோம் என்று பாஜக அரசு ஒரு புறம் கூறினாலும் பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை படிக்க முடிவதாகவுன், நன்கு படித்தும் பணம் இல்லாத மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பார்ப்பனியர்கள் தான் ஆனால் கீழுள்ளவர்களை ஜாதி கலவரங்களை தூண்ட வைக்கிறார்கள் அவ்வாறு ஜாதியை முன்னிறுத்தி போராடுபவர்கள் உங்கள் ஜாதியில் எத்தனை பேர் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என கூறுங்கள் என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வை எதிர்த்து நாங்ள் அனைவரும் போராடி வருவதாக குறிப்பிட்ட அவர் மக்கள் நீங்களும் துணை நின்று போராட வேண்டும் நீட் தேர்வு எவ்வளவு கொடுமையானது என்று புரிந்து கொள்ள வேண்டும் அதனை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

