கோவை: கோவை ஜி.ஆர்.டி. தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற “ஒளிப்படக் கருவி – ஒளிவிளக்கு – தொழில்வாய்ப்பு 2026” நிகழ்ச்சியில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் வழிகாட்டினர்.
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியின் தகவல் தொடர்பியல் துறை சார்பில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான “ஒளிப்படக் கருவி – ஒளிவிளக்கு – தொழில்வாய்ப்பு 2026” என்ற சிறப்பு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துறை வல்லுநர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வழிகாட்டுதல் பெறவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவில் ‘ஹார்ட் பீட்’ திரைப்படத்தின் கதை எழுத்தாளரும் இயக்குநருமான தீபக் சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

சிறப்புப் பேச்சாளர்களாக டாக்டர் வி. பழனியப்பன், மூத்த பத்திரிகையாளர் எல். ராஜகோபால், சூரியன் எஃப்.எம். கிளஸ்டர் சீனியர் புரொட்யூசர் ஆர்.ஜே. எஸ். ஸ்ரீனிவாஸ், ஈபிகைன்ட் (EpicKind) நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் குமார், அபிநயாலயா நடிப்புப் பள்ளியின் நிறுவனர் ஹரிஜா மற்றும் பிராண்டிங் நிபுணர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களது துறை சார்ந்த அனுபவங்களையும், தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
டாக்டர் ஜி.ஆர்.டி. கல்லூரியின் தாளாளர் டாக்டர் டி. பத்மநாபன், செயலாளர் கீதா பத்மநாபன் மற்றும் முதல்வர் டாக்டர் டி. சந்தா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ். சசிகலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு தொழில் வழிகாட்டுதல்களைப் பெற்றனர்.





