கோவை: கோவை, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரும் பல்வேறு பகுதிகளில் 2.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
அதன்படி தேவராயபுரம் ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புல்லாகவுண்டன்புதூர் மயானம் முதல் கொண்டையம்பாளையம் பள்ளம் வரை ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணியினையும், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறுதிட்டத்தின்கீழ், பச்சநாயக்கன்பாளையம் பாலையபதி அருகே ரூ2.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வெள்ளிமலைப் பட்டினம் ஊராட்சி. விராலியூரில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினை நேரில் பார்வையிட்டு, பால் கொள்முதல் விவரங்கள், விற்பனை, உறுப்பினர் விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்
பின்னர், நரசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியினை நேரில் பார்வையிட்டு, மாணாக்கர்களுக்கு கற்று தரப்படும் கல்வி முறைகள் மற்றும் தேர்ச்சி விகிதம் ஆகியவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புறத்தையும், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்புகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பூலுவப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட செல்வநாயகி கார்டன் லேஅவுட் பகுதியில், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.





