கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் வருகிற 29-ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.
கோவை மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஏலக்குழு அதிகாரிகள் முன்னிலையில் வாகனங்கள் எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில் வருகிற 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை முன்கூட்டியே பார்வையிடலாம். மாவட்ட ஆயுதப்படை மைதானம், கோவில்பாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம் மற்றும் காரமடை காவல் நிலையம் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை 28-ம் தேதி காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வர வேண்டும். அப்போது அசல் ஆதார் அட்டை மற்றும் அதன் ஒரு நகலை கொண்டு வந்து, ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். டோக்கன் பெறாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் வாகனத்தை எடுத்தவர்கள், ஏலத் தொகையுடன் அதற்குரிய சரக்கு மற்றும் சேவை வரியான 18 சதவீத ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து முழுமையாக அன்றைய தினமே அரசுக்கு ரொக்கமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு ஏலம் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





