கோவை: கோவை சின்ன தடாகத்தில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம் சின்ன தடாகம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் இருந்து காகம் ஒன்று திடீரென கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அந்த காகம் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் சிறிது நேரத்தில் ஆங்காங்கே மேலும் சில காகங்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் பார்த்தபோது, 6-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
நோய் தாக்கியதா? விஷம் வைக்கப்பட்டதா?
ஒரே பகுதியில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்துள்ளதால், அவற்றின் இறப்புக்கான காரணம் குறித்து பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
காகங்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தனவா அல்லது யாரேனும் விஷம் வைத்து காகங்களை கொன்றுள்ளனரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை
உயிரிழந்த காகங்களை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, அவற்றின் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன தடாகம் பகுதியில் ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்ன தடாகம் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காரணத்தை கண்டறிய வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.





