கோவை: கோவைப்புதூர் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர், கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் மற்றும் ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடைமைகளைச் சோதனையிட்டனர். அப்போது ஆயிரக்கணக்கில் போதை மாத்திரைகளும் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிடிபட்ட நபர்கள் கோவைப்புதூரைச் சேர்ந்த சல்மான் கான் (26) மற்றும் அவரது மனைவி பாத்திமா சஹானா (20) என்பதும், இவர்கள் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களுக்கு எவ்வாறு போதைப்பொருட்கள் கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.





