160,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் மண்டலத்தில் நடக்கும் நட்சத்திர பிறப்பின் ரகசியம்!
விண்வெளியில் பிரம்மாண்டமான ‘Superbubble’ அமைப்புடன் கூடிய நெபுலாவின் அசத்தலான படத்தை NASA-வின் Hubble Space Telescope பதிவு செய்துள்ளது. இந்தப் படம், நட்சத்திரங்கள் எவ்வாறு பிறக்கின்றன, அவை தங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசுகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதற்கான முக்கிய தடயங்களை வழங்குகிறது.
NASA வெளியிட்டுள்ள இந்தப் படம் LHA 120-N44 அல்லது N44 என அழைக்கப்படும் நெபுலாவை காட்டுகிறது. இது நமது பால்வெளி மண்டலத்திற்கு அருகில் உள்ள Large Magellanic Cloud எனப்படும் சிறிய துணைக் கேலக்ஸியில் அமைந்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 1.6 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இந்த விண்மீன் மண்டலம் உள்ளது. N44 அமைப்பு Dorado எனப்படும் விண்மீன் தொகுப்பின் திசையில் காணப்படுகிறது.
இந்த N44 நெபுலாவில் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சம் அதன் மையத்தில் காணப்படும் மிகப்பெரிய வெற்றுப் பகுதி. இதுதான் ‘Superbubble’ என அழைக்கப்படுகிறது.
இந்த Superbubble சுமார் 210 ஒளியாண்டுகள் நீளமும், 140 ஒளியாண்டுகள் அகலமும் கொண்டதாக NASA தெரிவித்துள்ளது. சாதாரணமாக ஒரு வெற்றுப் பகுதி போன்று தெரிந்தாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய நட்சத்திரங்களின் சக்திவாய்ந்த செயல்பாடுகள் உள்ளன.
எப்படி உருவானது?
N44 பகுதியின் மையத்தில் உருவான மிகப்பெரிய நட்சத்திரங்கள் தொடர்ந்து சக்திவாய்ந்த stellar winds எனப்படும் நட்சத்திரக் காற்றை வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவற்றில் சில நட்சத்திரங்கள் தங்களது வாழ்நாளின் இறுதியில் Supernova எனப்படும் மிகப்பெரிய வெடிப்புகளையும் சந்தித்துள்ளன.
இந்த நட்சத்திரக் காற்று மற்றும் சூப்பர்நோவா வெடிப்புகளின் தாக்கத்தால், நட்சத்திரங்கள் உருவான பகுதியைச் சுற்றியிருந்த வாயுக்கள் வெளியே தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக மையப்பகுதியில் மிகப்பெரிய வெற்றிடம் போன்ற அமைப்பு உருவாகியுள்ளது. இதுவே தற்போது Superbubble ஆக Hubble படத்தில் தென்படுகிறது.
ஆனால் கதை இத்துடன் முடிவடையவில்லை…
நட்சத்திரங்கள் வாயுக்களை மையப்பகுதியிலிருந்து வெளியே தள்ளியபோது, அந்த வாயுக்கள் ஒன்றாகச் சுருக்கப்பட்டு Superbubble-ஐ சுற்றி அடர்த்தியான வாயு மற்றும் தூசியால் ஆன ஒரு பெரிய வளையத்தை உருவாக்கியுள்ளன.
இந்த அடர்த்தியான வாயு வளையத்தில்தான் தற்போது புதிய நட்சத்திரங்கள் உருவாகி வருகின்றன.
இதனால் N44 பகுதி விஞ்ஞானிகளுக்கு மிகவும் முக்கியமான நட்சத்திரப் பிறப்பிடமாக மாறியுள்ளது. குளிர்ந்த வாயு மேகங்கள் எவ்வாறு சுருங்கி அடர்த்தியான பகுதிகளாக மாறுகின்றன, அதன் பின்னர் புதிதாக உருவாகும் நட்சத்திரத்தின் மையத்தில் அணுக்கரு இணைவு எப்போது தொடங்குகிறது என்பதைக் கண்டறிய இந்தப் பகுதி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
5 லட்சம் நட்சத்திரங்கள் ஆய்வு
இந்தப் பகுதியில் Hubble Space Telescope மேற்கொண்ட ஆய்வின் மூலம் கிட்டத்தட்ட 5 லட்சம் நட்சத்திரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 30,000 நட்சத்திரங்கள் ‘pre-main-sequence stars’ எனப்படும் ஆரம்பகட்ட நட்சத்திரங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரங்கள் இன்னும் தங்களது மையத்தில் ஹைட்ரஜனை ஹீலியமாக இணைக்கும் அணுக்கரு இணைவு செயல்முறையைத் தொடங்காத நிலையில் உள்ளன.
மிகவும் மங்கலாக இருக்கும் சிறிய நட்சத்திரங்களைக்கூட அதிக உணர்திறன் மற்றும் நுணுக்கமான படத் தெளிவுடன் Hubble கண்டறிய முடிந்ததால், இந்த பகுதியில் உள்ள ஏராளமான இளம் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் அடையாளம் காண முடிந்துள்ளது.
ஒளிரும் வாயு வளையம்
N44-ஐ சுற்றியுள்ள வாயு வளையம், அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரங்களிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்வீச்சால் சக்தியூட்டப்படுகிறது. இதனால் அந்த வாயுக்கள் ஒளிர்ந்து, Hubble படத்தில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் தனித்துவமான அமைப்புகளுடன் காட்சியளிக்கின்றன.
இந்த N44 வளாகத்தில் Superbubble மட்டுமின்றி சிறிய அளவிலான மற்றொரு bubble அமைப்பும் காணப்படுகிறது. N44F என அழைக்கப்படும் இந்த சிறிய bubble, ஒரு மிகப்பெரிய வெப்பமான நட்சத்திரத்திலிருந்து வெளியான தீவிரமான நட்சத்திரக் காற்றினால் உருவானதாக NASA தெரிவித்துள்ளது.
நட்சத்திரங்களின் பிறப்பை புரிந்துகொள்ள உதவும் படம்
N44 போன்ற பகுதிகள், பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் விதத்தை புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு முக்கியமான ஆய்வுத் தளங்களாக உள்ளன.
குறிப்பாக, Large Magellanic Cloud போன்ற கனமான தனிமங்கள் குறைவாக உள்ள விண்மீன் மண்டலங்களில் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை Hubble-ன் இந்த ஆய்வுகள் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ஒரு புறம் மிகப்பெரிய நட்சத்திரங்கள் தங்களது சக்திவாய்ந்த கதிர்வீச்சு, நட்சத்திரக் காற்று மற்றும் சூப்பர்நோவா வெடிப்புகளால் சுற்றியுள்ள விண்வெளியை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், அவை வெளியே தள்ளிய வாயுக்கள் மீண்டும் சுருக்கப்பட்டு புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்துகின்றன.
இதனால் N44 நெபுலாவில் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி மற்றும் அவை சுற்றுச்சூழலை மாற்றும் விதம் ஆகியவை ஒரே பகுதியில் காணப்படுகின்றன.
இந்த பிரம்மாண்டமான விண்வெளிக் காட்சியை NASA-வின் Hubble Space Telescope பதிவு செய்திருப்பது, பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எவ்வாறு பிறக்கின்றன என்பதற்கான புரிதலை மேலும் விரிவுபடுத்தும் முக்கியமான ஆய்வுத் தகவலாக பார்க்கப்படுகிறது.





