கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க ரூ.75 கோடி திட்டம்!

கோவை: கோவை மாநகரில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.75 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் 20 முதல் 25 கி.மீ. நீளமுள்ள சாலைகளைச் சீரமைக்கவும், டிசம்பர் மாதத்திற்குள் பணிகளைத் தொடங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 257 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநகராட்சியின் பராமரிப்பில் சுமார் 2,700 கி.மீ. நீளமுள்ள சாலைகள் உள்ளன. இவற்றில் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

Advertisement

குறிப்பாக, மழைக்காலங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் அவை இருப்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அவசரமாக மேற்கொள்ளப்படும் தற்காலிக சீரமைப்புப் பணிகளும் மழையில் சேதமடைவதால், சாலைகளின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

மேலும், 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணிகளும், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாகச் சீரமைக்கப்படாததால், கனரக வாகனங்கள் செல்லும்போது சாலைகள் மீண்டும் சேதமடைவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

மழைக்காலத்திற்கு முன்பாக சாலைகளில் தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பல இடங்களில் சாலைகளின் நிலை முழுமையாகச் சீராகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக சாலைகளைச் சீரமைக்கும் நடவடிக்கையாக ரூ.75 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் 20 முதல் 25 கி.மீ. சாலைகளைச் சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதற்கிடையே, கோவை கிராஸ்கட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் நிகழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சாலைப் பராமரிப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது. வடவள்ளியைச் சேர்ந்த தாரா (60), ரேபிடோ இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, எதிரே வந்த சுற்றுலா பேருந்து மீது மோதுவதைத் தவிர்க்க ஓரமாகச் சென்றுள்ளார். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியதால் விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து மோதியதில் தாரா உயிரிழந்தார். ரேபிடோ ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த விபத்து தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குப் பின்னர் சாலையிலிருந்த பள்ளம் மூடப்பட்டதாகவும், முன்னதாகவே சீரமைக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கோவையில் சாலைப் பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, தற்காலிகப் பணிகளுடன் நிறுத்தாமல் தரமான முறையில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரூ.75 கோடி திட்டத்தின் கீழ் பணிகள் எப்போது தொடங்கும், சேதமடைந்த சாலைகள் முழுமையாகச் சீரமைக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...