கோவை: கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சூழல் சுற்றுலா இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்
இந்நிலையில் கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (21/09/2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மழை தணிந்து, அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நிலைமை சீரானதும் சுற்றுலா மீண்டும் தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் இன்று கோவை குற்றாலத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.





