கோவை : கோவையில் போதை மறுவாழ்வு மையத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 65 வயது முதியவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதுகாப்பான மைய வளாகத்தில் அவருக்கு எவ்வாறு தீக்காயம் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணார்பேட்டை எல்.ஐ.ஜி. ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் யாசின் (65). மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மகள் ரியாஸ் நிஷா (35), யாசினை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி 3-வது வீதியில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் உணவு அருந்திய பின்னர் யாசின், மையத்தின் பின்புற பகுதிக்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அங்கு சென்ற மைய ஊழியர்கள், யாசின் உடலில் பலத்த தீக்காயங்களுடன் தரையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று யாசின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகள் ரியாஸ் நிஷா, சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுவாழ்வு மையத்தின் வளாகத்திற்குள் இருந்தபோது யாசினுக்கு எவ்வாறு தீக்காயம் ஏற்பட்டது? அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக மைய ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





