கோவை: கோவையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போயுள்ளது. அதே நேரத்தில் கோடைகாலத்தில் பதிவாகும் அளவிற்கு தினமும் வெப்பம் பதிவாகி வருகிறது.
இதனால் குளுகுளுவென வாழ்ந்துவந்த கோவை வாசிகள் தற்போது கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே கோவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தனது கணிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது போல பல்வேறு பகுதிகளில் மழை பதிவாவதில்லை.
ஏதேனும் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பதிவாகிறது. இதனால் வானிலை மையம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? எவ்வளவு மழைக்கு வாய்ப்பு? என்ற விவரங்களை அறிந்துகொள்ள பிரத்யேக செயலி அல்லது மென்பொருளை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை வானிலை
கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பை வெளியிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் எவ்வளவு மழைக்கு வாய்ப்பு என்ற விவரங்களும் வெளியாகியுள்ளன. அதனை இந்தத் தொகுப்பில் காணலாம்…
அக். 2 முதல் 6-ம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக். 2, 3, 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: சட்ட உதவி முதல் மருத்துவ சிகிச்சை வரை.. கோவையில் முதியோருக்காக சிறப்பு முகாம்
அக். 7 மற்றும் 8-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவையில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை நீடித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை நிலவ வாய்ப்புள்ளது.





