“டிஜிட்டல் அரெஸ்ட்” – கோவை பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி!

கோவை: “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்துள்ளதாக மிரட்டி, கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்த கேரள நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் மருத்துவரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தான் போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கை பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக அவரை “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்துள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

மேலும், பெண்ணின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆய்வு செய்வதற்காக, தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆய்வு முடிந்ததும் அந்த பணம் மீண்டும் அவரது வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பணத்தை அனுப்பாவிட்டால் அவரது வீட்டின் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்கள் வீட்டுக்குள் வந்து கைது செய்து விடுவார்கள் என்றும் கூறி பெண் மருத்துவரை மிரட்டியதாக தெரிகிறது.

Advertisement

இதனை உண்மை என நம்பிய பெண் மருத்துவர், பயந்துபோய் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.98 லட்சத்தை மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பணம் திருப்பி அனுப்பப்படாததால் சந்தேகமடைந்த அவர், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பணப் பரிமாற்றங்களை தொடர்ந்து கண்காணித்த போலீசார், சுமார் 10 நாட்கள் விசாரணைக்குப் பிறகு மோசடியில் தொடர்புடைய நபரை அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

விசாரணையில், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளா சென்ற சைபர் கிரைம் போலீசார், அங்கு பதுங்கியிருந்த ராஜேஷை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பெண் மருத்துவரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.98 லட்சத்தில் ரூ.20 லட்சம் ராஜேஷின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. பின்னர் அந்த கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பெயரில் பல்வேறு வங்கி கணக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்குகளில் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் குறித்தும், இந்த மோசடி சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மருத்துவர் பி.எஸ். ராஜனின் சேவைகளைப் பாராட்டி விருது… மருத்துவர்கள் வாழ்த்து…!

கோவை ELCE மருத்துவமனை டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு ‘சிறந்த அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் நிபுணர் விருது – 2026’ வழங்கப்பட்டது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...