கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஜி.என். மில்ஸ் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் ரெயின் கோட் அணிந்தபடியும், பொதுமக்கள் குடைகளை பிடித்தபடியும் பயணம் மேற்கொண்டனர்.
மழையின் காரணமாக சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். கனமழையால் நாள் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்து, கோவை புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.






