கோவை: கோவையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள்களுக்கு எதிராகக் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி உத்தரவின்பேரில், கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை, கே.ஜி. சாவடி உள்ளிட்ட 228 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், 72 தனிப்படைகளைச் சேர்ந்த 480 காவல்துறையினர் பங்கேற்றனர்.
இந்த சோதனையின் மூலம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவுக் குற்றவாளிகள் இருவர் உட்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 7 கிலோ 702 கிராம் கஞ்சா, 2 கிராம் மெத்தாம்பெட்டமைன், 1,000 போதை மாத்திரைகள் மற்றும் 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 செல்போன்கள், 16 இருசக்கர வாகனங்கள், 2 அரிவாள்கள் மற்றும் 15,000 ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






