கோவை: கோவையில் சூரிய மின் திட்டம் குறித்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோவை மாநகர் வட்டத்தின் சார்பில் ‘சேவா சேது அபியான் – பிரதம மந்திரி சூரிய வீடு மின் திட்டம்’ குறித்த விழிப்புணர்வு முகாம், நேருநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு சூரிய ஒளி மின் உற்பத்தியின் அவசியம், அதற்கான அரசின் மானியங்கள், விண்ணப்ப முறை, வங்கி கடன் வசதி மற்றும் நிறுவல் வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக, வீடுகளில் மூன்று கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் சூரிய பேனல்கள் அமைத்து மத்திய மாநில அரசுகள் வழங்கும் மொத்த மானிய தொகையான ரூபாய் ஒரு லட்சம் மானிய தொகையை பெற்று பயனடையுமாறு பொதுமக்களிடம் இந்நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஒண்டிப்புதூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த பல்வேறு தகவல்களை கேட்டு அறிந்து கொண்டனர்.
நிகழ்வு குறித்து பேசிய கோவை மெட்ரோ மின் பகிர்மான கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜி.சாந்தநாயகி,
சூரிய மின் உற்பத்தி நிறுவுவதற்கு மத்திய மாநில அரசுகள் வழங்கி வரும் மானிய தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு மிகவும் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
கோவையில் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் எனவும், இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






