கோவை : கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள் முதல் முக்கியச் சாலைகள் வரை மழைநீர் தேங்கியுள்ள நிலையில், நாளை (அக். 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீட்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமடையும் நிலையும் ஏற்பட்டது.
இதற்கிடையே, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தையும் மழைநீர் சூழ்ந்தது. நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்ததால், நோயாளிகளும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால், அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று தண்ணீரில் சிக்கியது.
தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, நாளை பள்ளிகள் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், நாளை அக்டோபர் 26-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று தவறான தகவல் பரவிய நிலையில், மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனமழை காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லும்போது ஏற்படக்கூடிய சிரமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்யும் சூழலில், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீர் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.






