கோவை: கோவை பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், பீளமேடு காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் மாணவனின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத்தினர் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
கோவை அவிநாசி சாலையில், பீளமேடு அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற மாணவர், கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வகுப்பாசிரியர் மற்றும் சக மாணவர்கள் சாதிய ரீதியாகத் தீண்டாமைக் கருத்துகளைத் தெரிவித்ததாகவும், மாட்டிறைச்சி உண்பதைக் குறிப்பிட்டு சாதிப் பெயரைக் கூறி அவமதித்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தமே தனது மகனின் தற்கொலைக்குக் காரணம் என்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாகப் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், சக மாணவர்கள் இருவரைக் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், சாதிய ரீதியிலான அவமதிப்புப் பேச்சுகளுக்குப் பள்ளி வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமையாசிரியர் அருண்குமார் ஆகியோரே காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தனது மகனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்து வருகின்றனர்.
முதலில் பீளமேடு காவல் நிலையத்தில் இரண்டு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தற்போது தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடாரம் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவனின் பெற்றோர் மற்றும் முற்போக்கு இயக்கத்தினர் மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதியை நேரில் சந்தித்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், வேறு விசாரணை அமைப்பின் மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்துப் பேசிய மாணவனின் தந்தை அசோக்குமார், “ஆறு நாட்களாகியும் இன்னும் சாட்சிகள் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். இதனால் காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
வேறு காவல்துறையினரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆசிரியர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் இவ்வாறு செயல்படுகிறார்களா என்பது புரியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பத்மநாபன், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மாணவனின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார்.
இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டால் மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் முதலமைச்சரின் நிவாரணம் தொடர்பான அரசாணைகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.






