கோவை: கோவை சூலூர் அருகே கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தார் சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் சூலூர் அருகே வாரப்பட்டி புளியமரத்துப்பாளையம் பகுதியில் தார் சாலை மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியத்திற்குப் பிறகு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, சில பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக, சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி புளியமரத்துப்பாளையம் பகுதியில் சாலையின் மீது மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, சாலையின் அடிப்பகுதியை மழைநீர் அரித்துச் சென்றதால் தார் சாலை சேதமடைந்தது.
சாலையின் இருபுறங்களிலும் தாழ்வான வெற்றிடங்கள் உள்ளதால், அப்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, சாலை சேதமடைந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சேதமடைந்த சாலையைச் சீரமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் சாலை சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.






