கோவை: தேசிய அளவிலான CBSE பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
போபாலில் தேசிய அளவிலான CBSE பள்ளிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு CBSE பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது நீச்சல் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் கோவை மாவட்டம் அன்னூர் நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைக் கைப்பற்றி பள்ளிக்கும், கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
குறிப்பாக, Under-19 பிரிவில் நடைபெற்ற 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில் சுபஸ்ரீ, ஹரித்ராஸ்ரீ, யாஷினி, பிரதிக்சா மற்றும் மதுமிதா ஆகிய மாணவிகள் அடங்கிய அணியினர் சிறப்பாக நீந்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற மெட்லி ரிலே (Medley Relay) போட்டியிலும் நவ பாரத் பள்ளி மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து மற்றொரு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி 100 மீட்டர் பட்டர்ஃபிளை (Butterfly) நீச்சல் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அதேபோல், Under-14 பிரிவில் நடைபெற்ற ரிலே நீச்சல் போட்டியிலும் நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.
தேசிய அளவில் பல்வேறு CBSE பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், கோவை அன்னூர் பள்ளி மாணவிகள் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் தங்களது திறமையை நிரூபித்து சாதனை படைத்துள்ளதற்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள கோவை பள்ளி மாணவர்களின் இந்த வெற்றி, சக மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.






