கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத கோயம்புத்தூரை உருவாக்கவும், தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், மாநகராட்சி சார்பில் விலங்கினப் பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டமான Animal Birth Control (ABC) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து HAS நிறுவனத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள், டாக்டர் இல்லனா மற்றும் டாக்டர் ருவி ஆகியோர் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சை மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சியின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் வருண்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அறுவை சிகிச்சை நடைமுறைகள், சிகிச்சைக்குப் பிறகு நாய்கள் பராமரிக்கப்படும் விதம் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 1,11,074 தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் கருத்தடை அறுவை சிகிச்சைத் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 47,000 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதுடன், அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies Vaccination – ARV) செலுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு வெறிநோய் பரவும் அபாயத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் அனைத்தும் 2030-ஆம் ஆண்டுக்குள் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியை வெறிநோய் இல்லாத நகரமாக உருவாக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தெருநாய்களின் கருத்தடை, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி தனது கால்நடை மருத்துவக் கட்டமைப்பு, அறுவை சிகிச்சைத் திறன் மற்றும் தடுப்பூசிப் பணிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து, கோயம்புத்தூர் மாநகராட்சியை 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






