கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த 11 அரசு பள்ளிகளின் 55 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மினி கியூப் செயற்கைக்கோள், ஹீலியம் பலூன் மூலம் வளிமண்டலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக விண்வெளி அறிவியல் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா ஐந்து மாணவர்கள் என மொத்தம் 55 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு விண்வெளியின் அமைப்பு, வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகள், விண்வெளியில் காணப்படும் நுண் துகள்களின் தன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சேகரித்து ஆய்வு செய்வது என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்கள் வெறும் புத்தகங்களில் விண்வெளி அறிவியலைப் படிப்பதோடு நின்றுவிடாமல், நேரடியாக ஒரு விண்வெளி ஆய்வு முயற்சியில் ஈடுபடும் வகையில் தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மினி கியூப் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினர். இந்த செயற்கைக்கோளில் வளிமண்டலத்தில் உள்ள நுண் துகள்களைச் சேகரித்து ஆய்வு செய்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டன.
இதையடுத்து, மாணவர்கள் தயாரித்த மினி கியூப் செயற்கைக்கோள் கோவை துடியலூரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இருந்து ஹீலியம் பலூனுடன் இணைக்கப்பட்டு வளிமண்டலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட இந்த பலூன் பூமியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் உயரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பலூன் வெடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் செயற்கைக்கோள் மற்றும் அதில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வளிமண்டலத்தின் உயரமான பகுதிகளில் உள்ள நுண் துகள்களைச் சேகரித்து ஆய்வு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வில் சேகரிக்கப்படும் மாதிரிகளை அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாணவர்கள் விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவுகள் மற்றும் ஆய்வு விவரங்களை கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே பூமியின் மேற்பரப்பில் காணப்படும் நுண் துகள்கள் மற்றும் அவற்றின் தன்மைகள் குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தற்போது வளிமண்டலத்தின் உயரமான பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் நுண் துகள்களையும் ஆய்வு செய்து, பூமியில் காணப்படும் துகள்களுக்கும் வளிமண்டலத்தில் உள்ள துகள்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்ன, அவற்றின் தன்மைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பது குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சிறு வயதிலேயே விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக, வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் அறிவியலை நடைமுறைச் செயல்பாடுகளுடன் இணைத்து மாணவர்களே ஒரு ஆய்வு முயற்சியை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.






