கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இறுதிக்கட்ட விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகள், அணிகலன்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பிரகாசம் சாலை, காந்திபுரம், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பெரிய ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி சாலையோரக் கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்து பொதுமக்கள் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் ஒழுங்காகச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குழந்தைகள் மற்றும் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது அசம்பாவிதங்கள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.






