கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நேற்று இரவு வந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த பூங்கொடி என்பவரின் வீட்டை சேதப்படுத்தி, அவர் வாங்கி வைத்திருந்த ரேசன் அரிசியை சாப்பிட்டு சேதப்படுத்தி சென்றுள்ளது.
வீட்டு சுவர், கூரை, கேட் உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்களிடம் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் உலாவும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதே போன்று யானை வீட்டை சேதப்படுத்தி அரிசியை சாப்பிடும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.





