கோவை: ஐ.ஜி. ரம்யா பாரதி உத்தரவின்பேரில் மேற்கு மண்டலத்தின் 8 மாவட்டங்களில் விடிய விடிய நடந்த போலீஸ் சோதனையில் 1,235 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் 36 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. நவம்பர் 9 முதல் 10 வரை, அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
1,235 பேரிடம் தணிக்கை
காவல்துறையின் சரித்திரப் பதிவேட்டில் உள்ள 1,235 பேரை போலீசார் நேரில் சென்று தணிக்கை செய்தனர். இதில், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 1,111 பேரிடம் நன்னடத்தைப் பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் வழக்குகளில் ஏற்கெனவே தொடர்புடைய 265 பேரை போலீசார் கண்காணித்தனர். இதில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொலை, அடிதடி வழக்குகளில் முன்பு தண்டனை பெற்றவர்கள் மற்றும் பிணையில் வெளியே வந்தவர்கள் என 441 பேரும் தணிக்கை செய்யப்பட்டனர். இந்தச் சோதனையில் புதிதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ட்ரோன் கண்காணிப்பு, வாகனச் சோதனை
பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பாக 786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 806 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாகனச் சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 684 வழக்குகள், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 208 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேற்கு மண்டலத்தில் இதுபோன்ற சிறப்புச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ரம்யா பாரதி எச்சரித்துள்ளார்.
மேற்கு மண்டலத்தின் 8 மாவட்டங்களில் போலீசார் நடத்திய சிறப்புச் சோதனையில், காவல்துறையின் சரித்திரப் பதிவேட்டில் உள்ள 1,235 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் 36 பேர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.






