கோவை : தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு, “இந்த ஆட்சியை அப்படியே விட்டால் தானாகவே கவிழ்ந்துவிடும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் விஜய், தவெக ஆட்சியின் செயல்பாடு, கூட்டணி மற்றும் இடைத்தேர்தல் குறித்துப் பேசினார்.
விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட முடியாது
திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்த காலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்கியதாக தினகரன் கூறினார்.
மக்கள் மாற்றத்தை விரும்பித் தவெகவைத் தேர்ந்தெடுத்ததாகவும், சினிமா கதாநாயகன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் இளைஞர்களும் இளம் பெண்களும் வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய தமிழ்நாடு “சினிமா மாநிலமாக” மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
திரைப்பட நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்றவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய தினகரன், அமைச்சர்களில் யாராவது சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
விஜய்யைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் ஒப்பிட முடியாது என்ற அவர், சினிமாவில் கதாநாயகனாக நடித்த விஜய், நிஜத்தில் வில்லன் என்று தேர்தலுக்கு முன்பே அவரே கூறியதாகத் தெரிவித்தார்.
தவெக எம்எல்ஏக்கள் குறித்துப் பேச்சு
துணை சபாநாயகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியாகும் செய்திகள் குறித்து தினகரன் விமர்சித்தார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரைச் சந்திக்க முயன்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.
கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது ஊடகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
விஜய் முதலமைச்சரான பிறகு மற்ற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வரும் விருப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அது அவர்களின் ஜனநாயக உரிமை என்றும் தினகரன் தெரிவித்தார். அசாமில் போதிய அடித்தளமின்றி ஆட்சிக்கு வந்த கட்சியின் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதே நியாயம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்த தினகரன், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதே நியாயமாக இருக்கும் என்றார். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க அதிமுகவுக்கு அமமுக உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது ஆதங்கங்களைக் கட்சித் தலைமையிடமே நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெரியார் அறிவுலகம் விவகாரம்
பெரியார் அறிவுலகம் தொடர்பாக எழுந்துள்ள முறைகேடு புகார்கள் குறித்துப் பேசிய தினகரன், பெரியார் பெயரில் இதுபோன்ற ஊழல் நடந்திருக்கக் கூடாது என்றார். ‘சண்டியர்’ திரைப்படப் பெயர் குறித்த கேள்விக்கு, அந்தப் பெயருக்கும் குறிப்பிட்ட சமுதாயத்துக்கும் தொடர்பில்லை எனக் கூறினார்.
கிருஷ்ணசாமி தனது நண்பர் என்றும், இப்போது அந்த விவகாரம் குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி சகோதரர்களாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
முதலமைச்சரின் மௌனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த தினகரன், ஆட்சிக்கு வருவோம் என்று விஜய்யே எதிர்பார்த்திருக்க மாட்டார் என விமர்சித்தார்.
குஜராத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கியதன் மூலம் பிரதமர் மோடி நாடு முழுவதும் அறியப்பட்டதாகவும், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அவர் செயல்படுவதாகவும் கூறிய தினகரன், அரசியலுக்கு அண்மையில் வந்துள்ள விஜய்யின் ஆட்சியில் தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார்.





