கோவை : தனது செல்போனுக்கு ‘பாம் கால்’ வந்ததாக 45 வயது நபர் ஒருவர் அவசர உதவி எண்ணில் தெரிவித்ததால், கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். விசாரணையில், தேவையற்ற ‘ஸ்பேம்’ அழைப்புகளையே அவர் ‘பாம் கால்’ எனக் குறிப்பிட்டது தெரியவந்தது.
கோவையைச் சேர்ந்த அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு புதிதாக சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த எண்ணுக்குத் தொடர்ந்து ஸ்பேம் அழைப்புகள் வந்ததால், செல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.
சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்றபோது, தனது செல்போனுக்கு ‘பாம் கால்’ வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அழைப்பு கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இணைக்கப்பட்டது. போலீசார் அவர் எங்கிருந்து பேசுகிறார் எனக் கேட்டபோது, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த மாநகர போலீசாரும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் சோதனை நடத்தினர். பேருந்துகள் நிற்கும் பகுதிகள், காத்திருப்பு அறைகள், பயணிகள் அமரும் இடங்கள் எனப் பேருந்து நிலையம் முழுவதும் சோதனையிட்டதில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் அந்த நபரின் செல்போனைப் பரிசோதித்தபோது, அவரது எண்ணுக்கு ஏராளமான ஸ்பேம் அழைப்புகள் வந்திருந்தது தெரியவந்தது. அந்த அழைப்புகளையே ‘பாம் கால்’ எனக் கூறியதாக அவர் விளக்கமளித்தார். வார்த்தைக் குழப்பத்தால் தவறான புரிதல் ஏற்பட்டதை அறிந்த போலீசார், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
திடீர் சோதனையால் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





