கோவை: கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷின் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு, துபாய் TVK EVENTS சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவை துடியலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கனிமொழி சந்தோஷ் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடர்ந்து மேற்கொண்டு வரும் களப்பணிகள், மக்கள் நலச் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளால் ஈர்க்கப்பட்டு, துபாய் TVK EVENTS சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் துபாய் TVK EVENTS சார்பில் முதன்முறையாக இத்தகைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய துபாய் TVK EVENTS பிரதிநிதி அனிருத், கனிமொழி சந்தோஷின் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். வரும் காலங்களிலும் சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாகவும், துபாய் வாழ் தமிழக வெற்றிக் கழகத்தினர் அமைப்பின் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும், குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைக்கான மளிகைப் பொருட்களும் கனிமொழி சந்தோஷ் நேரில் வழங்கினார். பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ், 35-வது வார்டு பகுதி செயலாளர் முத்துவேல் ராஜா, துடியலூர் 1, 2 மற்றும் 14-வது வார்டு பகுதி செயலாளர் சபரி மனோ, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், குறிப்பிட்ட வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.


