கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை, 26 நாட்களுக்குப் பிறகு இன்று (நவம்பர் 19) மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் வழித்தடத்தில் பல இடங்களில் பாறைகள் மற்றும் மண் சரிந்து தண்டவாளங்களில் விழுந்தன. மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து தண்டவாளங்களின் குறுக்கே விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் நிலவிய பாதகமான வானிலை மற்றும் கடினமான நில அமைப்புக்கு மத்தியிலும் தண்டவாளங்களில் சரிந்து கிடந்த பாறைகள், மண் மற்றும் மரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பல இடங்களில் ஏற்பட்டிருந்த சேதங்களின் அளவு அதிகமாக இருந்ததால் சீரமைப்புப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ரயில் தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 26 நாட்களுக்குப் பிறகு இன்று (19.11.2026) முதல் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
VIDEO
இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் மேற்கொண்டனர். மலைப்பாதையில் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி உற்சாகமாகப் பயணித்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கிய நாளிலேயே அதில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமாக இருப்பதாகவும், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி மேற்கொண்ட மலை ரயில் பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தனர்.
கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக 26 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


