கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் டாஸ்மாக் பாரில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 கேட்டவரைத் தாக்கியதாக எழுந்த புகாரில், பார் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 கேட்டவரைத் தாக்கியதாக எழுந்த புகாரில், பார் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 21-ஆம் தேதி இரவு 9 மணியளவில், 32 வயதான கோகுலகிருஷ்ணன், லாலி சாலை முனியப்பன் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1721-ல் காலி மது பாட்டிலுக்கான ரூ.10-ஐ திருப்பிக் கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த பார் ஊழியர்கள் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதில் காயமடைந்த கோகுலகிருஷ்ணன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயபாண்டியன் (37), சண்முகசுந்தர் (24) ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.]


