கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து தீபங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் மாதிரி தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இன்று நேரில் பார்வையிட்டார்.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான ‘ஜலி’ இலச்சினையை அறிமுகப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் மாதிரி தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை முறையாகச் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், எதிர்கால குடிநீர் தேவையையும் ஓரளவுக்குப் பூர்த்தி செய்ய முடியும். இதனை வலியுறுத்தி வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
மேலும், விழிப்புணர்வு பிரசாரங்கள், பேரணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது மாநகர நல அலுவலர் மருத்துவர் கார்த்திக், உதவி ஆணையர் மேகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


