கோவை: கணவரை ஏமாற்றி சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தைக் கிரயம் பெற்றதாகக் கூறியும், அந்த நிலத்தைத் திருப்பி ஒப்படைக்க வலியுறுத்தியும் சூலூர் அருகே பட்டணம் ஸ்ரீ கார்டன் பகுதியில் விவசாயக் குடும்பத்தினர், வீட்டின் முன்பு அமர்ந்து சமைத்து சாப்பிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அழகுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாமணி (75). இவரது மகன் பாலதண்டபாணி (48). இவருக்கு தனலட்சுமி (37) என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
பாலதண்டபாணிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அவரது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர்களது குடும்பத்துக்கு அழகுமலை பகுதியில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம், பட்டணம் ஸ்ரீ கார்டன் பகுதியில் வசிக்கும் தேவதாஸின் மகன் வின்சென்ட் பால்ராஜ், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பாலதண்டபாணியிடமிருந்து அந்த விவசாய நிலத்தைத் தனது பெயரில் கிரயம் பெற்றுள்ளார்.
தனது கணவரை ஏமாற்றி நிலத்தைக் கிரயம் பெற்றதாகக் கூறிய தனலட்சுமி, மாமியார் சாந்தாமணி மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் வின்சென்ட் பால்ராஜைச் சந்தித்து, நிலத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
Also Read: கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி- கோவையில் தடுப்பு நடவடிக்கைகள தீவிரம்…
அப்போது, ஒரு மாதத்துக்குள் நிலத்தைத் திருப்பித் தருவதாக வின்சென்ட் பால்ராஜ் உறுதியளித்ததாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர் அளித்த காலக்கெடு முடிந்து மேலும் ஒரு மாதம் கடந்தும் நிலம் ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த சனிக்கிழமை அவரது வீட்டுக்கு வந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால், வீட்டின் முன்பே தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

போராட்டம் குறித்து தகவலறிந்த பட்டணம் கிராம நிர்வாக அலுவலர், கடந்த சனிக்கிழமை நேரில் வந்து விசாரித்துச் சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
“எங்கள் நிலத்தை ஏமாற்றிப் பதிவு செய்துகொண்டார். நியாயம் கேட்டு வந்தால், வீட்டில் உள்ள நாய்களை அவிழ்த்துவிட்டு எங்களை நோக்கி ஏவுகிறார். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கேயே தங்கிப் போராடுவோம்” என்று சாந்தாமணியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


