கோவை: போக்குவரத்து விதிகளை மீறியதாக வாட்ஸ்அப்பில் போலியான அபராத அறிவிப்பை அனுப்பி, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1.44 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில், அவர் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், அதற்கான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை உண்மை என நம்பிய ராஜீவ்காந்தி, அதனுடன் அனுப்பப்பட்டிருந்த ஏபிகே (APK) கோப்பைப் பதிவிறக்கம் செய்து, தனது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.44 லட்சம் எடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்தி, தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வாட்ஸ்அப் மூலம் அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் ஏபிகே கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


