கோவை: சாலை ஓரங்களில் நின்று வாகன ஓட்டிகளை விபச்சாரம் மற்றும் பாலியல் தொழிலுக்கு அழைக்கும் போக்கு கோவையில் அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரங்கள் நடைபெற்று வருவது அதிகரித்த நிலையில் போலீசார் அப்போது ரெய்டு நடத்தி விபச்சார புரோக்கர்களைக் கைது செய்து தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஒரிசா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை மீட்டு காப்பகத்தில் அடைத்து வருகின்றனர்.
இது தவிர தன்னை விபச்சாரத்திற்கு அழைத்ததாக இளைஞர்கள் தரும் புகார் அடிப்படையிலும் போலீசார் விபசார கும்பலைக் கைது செய்து வருகின்றனர்.
ஆனால், கோவையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.
கோவையில் விபச்சாரம்

கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் சூலூர் சுற்றுவட்டாரங்களில் இரவு நேரங்களில் சாலையோரம் நிற்கும் சில திருநங்கைகள், வாகன ஓட்டிகளை விபசாரத்திற்கு அழைக்கின்றனர்.
இந்த பாலியல் தொழிலின் தொடர்ச்சியாக வழிப்பறி, அடிதடி போன்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியிருக்கின்றன.
திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதில் போலீசார் மெத்தனம் காட்டி வரும் நிலையில், தற்போது சிங்காநல்லூர் அருகேயும் இந்த அவலம் அரங்கேறி வருகிறது.
சிங்காநல்லூரை அடுத்த குளத்தேரி போட்-ஹவுஸ் பகுதியில் சாலை ஓரம் நிற்கும் திருநங்கைகள் வாகன ஓட்டிகளை விபச்சாரத்திற்கு அழைப்பதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.
கொடிகட்டிப் பறக்கிறது
இவர்கள் மார்டன் உடையில் குளக்கரைக்கும், திருச்சி சாலைக்கும் இடைப்பட்ட இருட்டான பகுதியில் நின்று, வாகன ஓட்டிகளைக் கைகாட்டி நிறுத்துகின்றனர்.

பின்னர், சிங்காநல்லூர் குளக்கரை அருகே உள்ள தன்னார்வலர்கள் அமைத்துள்ள மியாவாக்கி வனப்பகுதிக்கு அவர்களை அழைத்துச் செல்கின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சிங்காநல்லூர் குளத்தின் கரைப்பகுதியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று கல்வி கற்று வந்த நிலையில், அந்த இடத்தில் தற்போது பாலியல் தொழில் கொடி கட்டிப்பறக்கத் தொடங்கியுள்ளது.
இது அவ்வழியே குடும்பத்தினருடன் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. மெல்ல மெல்ல கோவை மாநகரை நோக்கி விரிவடைந்து வரும் இந்த கலாச்சார சீரழிவை போலீசார் முழுமையாக ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
