கோவை: நாய்க்கடி மட்டுமல்ல, சில நேரங்களில் சிறு கீறல் கூட உயிரைக் கொல்லும் என்று எச்சரித்துள்ள மருத்துவர் ப்ரீத்தி, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதித்தும், நோய்வாய்ப்பட்டும் மனிதர்கள் உயிரிழக்கும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில், கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் வளர்ப்பு நாயின் நகம் பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று ஹைதரபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதனிடையே நாய்க்கடி மட்டுமல்லாது கீறல் கூட எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கோவை ப்ரீத்தி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் ப்ரீத்தியிடம் கேள்வி எழுப்பினோம்.
மருத்துவர் ப்ரீத்தி கூறியதாவது:-

தெருநாய் அல்லது வளர்ப்பு நாய் எதுவாக இருந்தாலும், நாய்க்கடி மற்றும் கீறல் விஷயத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
காயம் ஏற்பட்ட இடத்தை சோப்பு போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் தண்ணீரில் கழுவ வேண்டும்.
சிக்கல் இருக்கிறது
ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது போலவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவரையும் அறிகுறிகள் மூலம் கண்டறிதல் கடினம்.
ஏனென்றால், ரேபிஸ் பாதித்தவருக்கு சாதாரண காய்ச்சல், உடல் சோர்வு, கடித்த இடத்தில் வலி அல்லது குத்துதல் போன்ற உணர்வு, அரிப்பு போன்ற பொதுவான அறிகுறிகளே ஏற்படுகின்றன.
தண்ணீரைப் பார்த்து பயப்படுதல், தனித்து இருத்தல், அக்ரோஷமாக நடந்து கொள்ளுதல், கோமா நிலைக்குச் செல்தல் உள்ளிட்டவை நோய் முற்றிய நிலையில் ஏற்படக்கூடும்.
அறிகுறிகளில் சில, உடனே தோன்றலாம், சிலருக்கு நீண்ட காலத்திற்கு எவ்வித அறிகுறியும் இல்லாமலிருந்து, திடீரென உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன.
எனவே நாய் மூலம் உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகி 5 டோஸ் முதல் (வீரியத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்) தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

குணப்படுத்த முடியாது
இன்றளவும் ரேபிஸ் ஒரு குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் சரி, அதன் மூலம் உங்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனே உங்களுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இதற்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோவையில் நாய்களிடையே ரேபிஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், மாநகரப் பகுதிகளில் மட்டும் 1.11 லட்சம் தெருநாய்கள் சுற்றித்திரிவதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. இவை அவ்வப்போது மக்களை தாக்கவும் செய்கின்றன.
எனவே இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. மீண்டும் சொல்கிறேன், நாய் மூலம் சிறு கீறல் ஏற்பட்டால் கூட உடனே மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுதிக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் முக்கியம்

குழந்தைகளிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர் திட்டுவார்கள் என்பதால் விளையாடச் செல்லும் சில குழந்தைகள் நாயால் ஏற்படும் கிறல் போன்ற காயங்களை மறைக்கக்கூடும்.
அவர்களிடம் இதன் தீவிரத்தன்மை குறித்து கூற வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை மறக்க வேண்டாம்.
இவ்வாறு மருத்துவர் ப்ரீத்தி கூறினார்.