காங்கிரஸ் போராட வேண்டிய களம் சென்னை- டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவிப்பு…

கோவை: SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் போராட வேண்டிய களம் சென்னை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், SIR நடவடிக்கையால் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement

தமிழகம், கேரளம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் SIR நடவடிக்கையால் 13 கோடி வாக்காளர்கள் விடுபட்டுள்ளதாகக் கூறப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டினார். வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து முறையான விசாரணை நடத்தி, தவறுகள் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 110 தொகுதிகளில் SIR காரணமாகத் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற கிருஷ்ணசாமி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலும் முடிவுகள் மாறியுள்ளதாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் பெரிய அளவில் வாக்காளர் நீக்கம் நடைபெற்றதாகத் தங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றார். வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டுபவர்கள், அதற்கான ஆதாரங்களையும் முழுமையான விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால், தமிழகத்தில் SIR விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார். வாக்காளர் நீக்கம் தமிழகத்தில் நடைபெற்றிருந்தால், தமிழகத்திலேயே போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி தமிழகத்தைப் போராட்டக் களமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

மார்ட்டின் குடும்பத்தினர் சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், பெரிய அரசியல் கட்சிகள் நிதி ஆதாயத்துக்காக இதுபோன்ற நபர்களைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம்பெற்றிருப்பது, அரசு இயந்திரங்கள் மீதான மறைமுக ஆதிக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிய கிருஷ்ணசாமி, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மாநிலக் காவல்துறைக்குப் பதிலாக மத்திய அரசின் காவல்துறையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய சூழலில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்று கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் ஒழிப்புக்காக முதலமைச்சர் விஜய் மெரினா கடற்கரையில் ஓடியதால் என்ன பயன் என்றும் விமர்சித்தார்.

விலைவாசி உயர்வால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போதிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கு நான்கு வார்த்தைகள்கூடப் பேசவில்லை என்று கிருஷ்ணசாமி விமர்சித்தார். கோவையின் தொழில்துறைப் பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும் என்ற அவர், பெரியார் அறிவுலகத் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால், அதற்கான பெருமையை திமுகவுக்கு வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்போது மக்கள் தங்களது குறைகளை யாரிடம் தெரிவிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், தமிழகத்தில் மக்கள் குறைகளைக் கேட்பதற்கான இடத்தில் வெற்றிடம் நிலவுவதாகவும் கூறினார். முதலமைச்சர் விஜய் கோவை வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணசாமி, மக்களுக்குப் பொழுதுபோக்க வேறு எதுவும் இல்லாததால் அவ்வாறு திரண்டு நிற்பதாகவும், மக்கள் இன்னும் தூக்கத்திலிருந்து எழவில்லை என்றும் விமர்சித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கனமழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி! – VIDEO

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...