படுக்க இடம் பிடிப்பதில் தகராறு; கட்டையால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை – கோவையில் பரபரப்பு!

கோவை : கோவை சரவணம்பட்டியில் மதுபோதையில் படுக்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஓட்டல் ஊழியர் கட்டையால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கனகராஜ் (50). இவர் கோவை துடியலூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, சரவணம்பட்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

Advertisement

கனகராஜ் மது அருந்தும் நேரங்களில் வீட்டுக்குச் செல்லாமல், சரவணம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள சத்திரத்தில் தங்கித் தூங்குவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினமும் மது அருந்திய அவர் வீட்டுக்குச் செல்லாமல் அங்குத் தங்கியுள்ளார்.

அப்போது, சரவணம்பட்டி மருதம் நகரைச் சேர்ந்த குமார் மற்றும் அவரது தம்பி மருதுபாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, படுக்க இடம் பிடிப்பது தொடர்பாக கனகராஜுக்கும், சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதில் ஆத்திரமடைந்த கனகராஜ், அங்கு கிடந்த கட்டையை எடுத்து குமாரைத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டியன், தனது அண்ணனை ஏன் தாக்கினாய் எனக் கேட்டு, அங்கு கிடந்த மற்றொரு கட்டையால் கனகராஜின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கனகராஜ், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இதையடுத்து, குமார் மற்றும் மருதுபாண்டியன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார், கனகராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கனகராஜைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சகோதரர்கள் குமார் மற்றும் மருதுபாண்டியனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கனமழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி! – VIDEO

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...