கோவை: 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மூன்று புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம், இடஒதுக்கீடு மற்றும் நீண்டகாலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, இஸ்லாமியர்களின் நீண்டகால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்ததாகத் தெரிவித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் இந்த இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், 3.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது, இடஒதுக்கீட்டின் பலன்கள் உரியவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் நீண்டகாலமாகச் சிறையில் உள்ள சிறைவாசிகளின் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.






