கோவை: பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் விஜய்.
கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே 1,98,000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்களை வைக்கும் வசதி, டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம், ஆராய்ச்சிப் படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், கோவையின் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். இந்தக் கட்டடம், நூலகம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு பிரிவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் பல்வேறு துறை சார்ந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பையும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்களை வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இணையவழி தகவல்களை அணுகுவதற்கான டிஜிட்டல் நூலகம், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் அறிவியல் மையம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையிலான ஆராய்ச்சிப் படிப்பகங்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து பயன்பெறும் வகையிலும் பிரத்யேக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த அறிவைப் பெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை விமான நிலையத்துக்கு வந்தடைந்த முதல்வர் விஜய்க்கு, விமான நிலையம் முதல் காந்திபுரம் வரையிலான வழித்தடத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஊர்வலமாக காந்திபுரம் பகுதிக்கு வந்த முதல்வர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து, காவல்துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர், பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கல்வெட்டையும் திறந்து வைத்து, மையத்தை முறைப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து, அறிவுலகத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நவீன வசதிகள், நூலகப் பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பகங்களை
பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில், ரூ.408 கோடியே 25 லட்சம் செலவில் நிறைவு செய்யப்பட்ட திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், 32 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனுடன்,34 கோடியே 72 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், சம்பத்குமார், விக்னேஷ், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் இன்னசென்ட் திவ்யா, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதுடன், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவுற்ற பணிகள், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் எனப் பல்வேறு நிகழ்வுகள் ஒரே விழாவில் நடைபெற்றன.






