கோவை : கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் விஜய்யைச் சந்தித்து இலவச வீடு கோரி மனு அளிக்க முயன்ற திருப்பூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தரையில் அமர்ந்து, படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தனக்கு வீடு வழங்கக் கோரி பல்வேறு கட்டங்களில் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை அளிக்க சக்திவேல் வந்துள்ளார்.
ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவும், அனுமதி அடையாள அட்டை இல்லாததாலும் அவரை விழா நடைபெறும் பகுதிக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த சக்திவேல், பெரியார் அறிவுலகத்துக்குச் செல்லும் பாதையில் தரையில் அமர்ந்தும் படுத்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவரது போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ
முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி, அனுமதி கிடைக்காததால் சாலையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சக்திவேல் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கைது தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.






