தீபாவளிக்கு கோவையிலிருந்து 799 சிறப்புப் பேருந்துகள்… எந்த ஊருக்கு எங்கிருந்து செல்லலாம்?

கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 799 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், செல்லும் ஊர்களின் அடிப்படையில் அரசுப் பேருந்துகள் வெவ்வேறு பேருந்து நிலையங்களிலிருந்தும், தனியார் ஆம்னி பேருந்துகள் கொடிசியா மைதானத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளன.

தொழில் நகரமான கோவையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், ஆண்டுதோறும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம்.

Advertisement

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் கூடுதல் பேருந்துகள் மற்றும் பயணிகளுக்கான உதவி ஏற்பாடுகளைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, மதுரை மற்றும் அதற்கு அப்பால் செல்லும் மாவட்டங்களுக்கான பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. திருச்சி மற்றும் அதன் அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.

Advertisement

சேலம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கான பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், கேரளா, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளன.

நீலகிரி மாவட்டம் மற்றும் மைசூரு செல்லும் பேருந்துகள் சாய்பாபா காலனி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குரிய பேருந்து நிலையங்களுக்குச் சென்று பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இது தவிர, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் கோவை கொடிசியா மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. நகரப் பகுதிகளுக்குள் அதிகளவில் பேருந்துகள் நுழைவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத் துணை மேலாளர் வாசுதேவன் தெரிவித்த தகவலின்படி, இந்த ஆண்டு 799 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு 2,200 பயண நடைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2,700 பயண நடைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கத்தை ஒருங்கிணைக்கவும், தகவல் தொடர்பு மற்றும் பயணிகளின் தேவைகளைக் கவனிக்கவும் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் துணை மேலாளர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பப் பணியாளர்கள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், ஓட்டுநர் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழுக்களில், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் தலா 15 போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் நூலக விவகாரம் | முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு!

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...