கோவை: கோவை அருகே பூனைக்குட்டி ஒன்று 60 அடி உயர தென்னை மரத்தில் சிக்கிய நிலையில் அதனைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கணியூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் 6 மாத பூனைக் குட்டி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதனை அங்கிருந்த நாய் துரத்தி உள்ளது.
இதனால் அந்த பூனை 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டது. அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பூனை இறங்கி விடும் என நினைத்து விட்டு விட்டனர்.
இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பூனை மரத்தில் இருந்து இறங்காமல் அங்கேயே தவித்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து கருமத்தம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீட்டிக்கக்கூடிய ஏணியின் உதவியுடன் மரத்தின் உச்சியில் ஏறினர். தொடர்ந்து பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பூனையை ஒரு வாளியில் வைத்து பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில்,
“பூனைகள் 60 அடி உயரம் வரை ஏறுவது அரிதான சம்பவம். இந்த பூனைக்குட்டி, தெரு நாய் துரத்தியதால் அச்சத்தில் மரத்தின் உச்சியில் ஏறியுள்ளது. பின்னர் அதனால் கீழே இறங்க முடியாமல் அங்கேயே தவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக உணவு இல்லாமல் பூனை பசியால் வாடி இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி பூனை மீட்கப்பட்டது.” என்றனர்.
பூனைக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

