கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், செவிலியர்கள் இன்று மூன்றாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயாளிகளின் சிகிச்சை பாதிக்கப்படாத வகையில், காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் துணைத்தலைவர் தாரகேஸ்வரி கூறுகையில், ரீ-டிப்ளாய்மென்ட் முறையை ரத்து செய்ய வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய நியமனத்தை ஒழிக்க வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும், மேலும் ‘ஸ்டாப் நர்ஸ்’ என்ற பதவிப் பெயரை ‘நர்சிங் ஆபீசர்’ என மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்றும், அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திங்கட்கிழமைக்குப் பிறகு அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில நிர்வாகம் அறிவிக்கும் என்றும் எச்சரித்தார்.
அதே நேரத்தில், அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரிவுகளிலும் செவிலியர்கள் பணியில் இருந்ததால் மருத்துவ சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், நோயாளிகளின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தாங்கள் ஒருபோதும் செயல்பட மாட்டோம் என்றும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.





