கோவை: ஜெயிலர் 2 திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு துடியலூர் முருகன் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூரில் உள்ள முருகன் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் திரண்டு, ஆட்டம், பாட்டம் எனத் திரைப்பட வெளியீட்டைத் திருவிழாவாகக் கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், ரஜினியின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரஜினிகாந்தின் பிரபலமான பாடல்களுக்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக நடனமாடினர். பாடல்களைப் பாடியும், ஆரவாரம் செய்தும் ரசிகர்கள் திரைப்பட வெளியீட்டை விமர்சையாகக் கொண்டாடினர்.
ரஜினிகாந்தின் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு கோவையில் ரசிகர்கள் நடத்திய இந்தக் கொண்டாட்டங்கள் அப்பகுதியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.





