கோவை: வீட்டுக்குள் நிம்மதியாக இருக்க முடியவில்லை… சமைப்பதற்காக வைத்திருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் பாதுகாக்க முடியவில்லை… கதவு, ஜன்னல்களைத் திறந்து வைக்க முடியவில்லை… இப்படி அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்கிறது கோவை காடம்பாடி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு!
கோவை மாவட்டம், காடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் மக்காச்சோளக் குடோனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில், பறக்கும் பூச்சிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினையால், வீடுகளில் வசிப்பதே சவாலாக மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
குமாரபாளையம் பிரிவு பகுதியில் பிரபல தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்துக்குச் சொந்தமான பெரிய குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் குடோனில் சுமார் 1,000 டன் மக்காச்சோளம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள மக்காச்சோளத்தில் இருந்து பூச்சிகள் பரவி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பகல் நேரம் மட்டுமல்ல… இரவு நேரத்திலும் வீடுகளுக்குள் கூட்டம் கூட்டமாகப் புகும் பூச்சிகளால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். வீட்டின் சுவர்கள், சமையலறை, உணவுப் பொருட்கள் எனப் பல இடங்களிலும் பூச்சிகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உணவுக்காக வாங்கி வைத்திருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களிலும் பூச்சிகள் புகுந்துவிடுவதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடும்பத்தினருக்குச் சமைத்துக் கொடுக்கும் உணவைக்கூட நிம்மதியாகத் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பூச்சிகளால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்நலம் குறித்து அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
வீடியோ
ஏற்கெனவே பல்வேறு அன்றாடப் பிரச்சினைகளுக்கு இடையே வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில், தற்போது பூச்சித் தொல்லையும் சேர்ந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தாலும், பூச்சிகள் தொடர்ந்து உள்ளே வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகக் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட குடோன் நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பூச்சிகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து, பூச்சிகள் பரவுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இயங்கி வரும் மக்காச்சோளக் குடோனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
வீடு என்பது ஒவ்வொருவருக்கும் நிம்மதி கிடைக்கும் இடம். ஆனால், பூச்சிகளின் படையெடுப்பால் வீட்டுக்குள்ளேயே நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் குமாரபாளையம் பிரிவு பகுதி மக்கள், தங்களது பிரச்சினைக்கு அதிகாரிகள் எப்போது தீர்வு காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.






