கோவை : கோவை சிட்ரா – காளப்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பில், அதிகாலை மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்ரா முதல் காளப்பட்டி செல்லும் சாலையில், என்.ஜி.பி. கல்லூரி எதிரே வி.எல்.கே. கார்டன் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலை 6.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் குடியிருப்புக்குள் நுழைந்துள்ளார். முதல் மாடிக்குச் சென்ற அவர், அங்கிருந்த அறைக்குள் புகுந்து மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 2 செல்போன்கள், டெல் மற்றும் ஹெச்.பி. நிறுவனங்களின் லேப்டாப்கள், வாட்ச் மற்றும் பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், குடியிருப்புக்குள் முதலில் வெறும் கைகளுடன் வரும் மர்ம நபர், பின்னர் ஒரு பேக்குடன் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குடியிருப்பில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து மாணவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடியிருப்பில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.





