கோவை : கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள 7 தளங்களைக் கொண்ட பெரியார் அறிவுலகம், நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது.
கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளத்துடன் 7 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தில் நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
திறப்பு விழாவை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த வளாகம், இரவு நேரத்தில் கண்கவர் தோற்றத்துடன் ஜொலிக்கிறது.

கோவை காந்திபுரத்தில், சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்தப் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை சுமார் 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வந்து பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, விழாவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நூலகம் முதல் கோளரங்கம் வரை… என்னென்ன வசதிகள்?
பெரியார் அறிவுலகம், ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விண்வெளி குறித்த அனுபவத்தைப் பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ஸ்பேஸ் லிப்ட் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் அறிவியல் தொடர்பான தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தரைத்தளத்துடன் மொத்தம் 7 தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில், ஒவ்வொரு தளத்திலும் நூலகம் மற்றும் அறிவியல் சார்ந்த வசதிகள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறப்பு விழாவை முன்னிட்டு பெரியார் அறிவுலகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஒளிரும் கட்டிடத்தின் தோற்றம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கல்வி, வாசிப்பு மற்றும் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம், கோவையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய மையமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






