கோவை: கோவையில் கொட்டும் மழையிலும் மாநகர காவல் ஆணையர் தலைமையில், அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
தொகுதி வாரியாக இவர்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர்கள், காவல்துறை ரோந்து வாகனங்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.
கோவை காந்திபார்க் பகுதியில் இருந்து வனக்கல்லூரி வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் துவக்கி வைத்தார்.
இதில் துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திடீரென மழைப்பொழிவு ஏற்பட்ட பொழுதிலும் போலீஸ் இசை முழங்க, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 70க்கும் மேற்பட்ட நான்கு சக்கர காவல்துறை ரோந்து வாகனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

